×

மாத்திரை வாங்க 10 கி.மீ. பயணம் விவசாயி சுருண்டு விழுந்து மரணம்

* ஊரடங்கு கெடுபிடியால் விபரீதம்
* முத்துப்பேட்டை அருகே பரிதாபம்

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை அருகே, போலீஸ் கெடுபிடியால் மாத்திரை வாங்க 10 கி.மீ. நடந்தே வந்த விவசாய கூலி தொழிலாளி சுருண்டு விழுந்து இறந்தார். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் ஓமங்காடு கிராமத்தை சேர்ந்தவர் தில்லைக்கண்ணு (56). விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி சரோஜா (50). இவர்களுக்கு முருகானந்தம், அய்யப்பன் என்ற இரு மகன்களும் உள்ளனர். தில்லைக்கண்ணு இருதய மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். நேற்றுமுன்தினம் மருந்து மாத்திரைகள் தீர்ந்து போனதால் அவற்றை வாங்குவதற்காக முத்துப்பேட்டைக்கு மகனுடன் பைக்கில் புறப்பட்டார். ஊரடங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் அவரை முத்துப்பேட்டை செல்ல அனுமதிக்காததால் மாத்திரை சாப்பிடாமல் அவதிப்பட்டார்.
 
இந்நிலையில் நேற்று காலை மருத்துவ சீட்டு ஆகியவை அடங்கிய கைப்பையுடன் ஊரிலிருந்து 10 கி.மீ. தூரம் நடந்தே முத்துப்பேட்டைக்கு வந்தார். அப்போது சுட்டெரித்த வெயிலை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறிய அவர், திருத்துறைப்பூண்டி சாலை யூனியன் ஆபீஸ் அருகே சாலையில் மயங்கி சுருண்டு விழுந்தார். அருகிலிருந்தவர்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்து முதலுதவி செய்து அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் சம்பவ இடத்திலேயே அவர் இறந்துவிட்டார். தகவலறிந்து அங்கு வந்த முத்துப்பேட்டை போலீசார் மற்றும் வருவாய் துறையினர், பையில் இருந்த ஆதார் அட்டை மூலம் கண்டறிந்து அவரது குடும்பத்தினரை வரவழைத்து உடலை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


Tags : traveling farmer , 10km ,buy tablet ,traveling farmer,died
× RELATED பிஏபி திட்ட நீர்மின் நிலையத்திற்காக...